பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் 06ஆம் திகதி, யாழ்ப்பாணம் குருநகர் இறங்கு துறையிலிருந்து பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் கடலில் மூழ்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஒரு சிறுவன் உட்பட 13 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த எட்வேட் உதயகுமாரி (64) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனுடன், இந்த படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
