இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய கொடியை இறக்கி அதற்கு பதிலாக கறுப்பு கொடி ஏற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் பெறுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று, துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின்போது தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, இன நல்லிணக்கப் பிரிவை பொறுப்பாகக் கொண்ட பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டவர்களைச் சேர்ந்த குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையை தயாரித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்திருந்தது.
அந்த விசாரணைகளின் அடிப்படையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக இரண்டு மாணவிகள் உட்பட சுமார் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக மட்டத்தில் மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சிறுபான்மை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு பொருத்தமான நாளாக கருதப்படவில்லை என்பதைக் காட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சில மாணவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கறுப்பு கொடி ஏற்றப்பட்ட தருணத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்நேரத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட சில மாணவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, பொலிஸார் வாகனத்துடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று நிர்வாக அதிகாரிகளிடம் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டமைக்கு சில மாணவர் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் வெளியிட்டுள்ளன.
